ஏதேனும் ஒரு சொல்

9 ஜூலை

தவிர்க்கவேண்டிய ஒரு வார்த்தையில்
துவங்குகிறது யுத்தம்.

வீசிஎறிந்திருக்கவேண்டிய
ஏதோ ஒரு சொல்லில்
நசுக்கப்படுகிறது
காலம் தாண்டிய நேசம்.

பகைமைக்குப்பையை
கோழிக்கால்களென
கிளறிக்கொண்டிருக்கின்றன
புறக்கணித்து மறக்கப்படாத
சொற்கள்.

ஈரம் நிறைந்த ஏதேனும் ஒரு சொல்
இளக்குகிறது
இரும்புக்கு நிகரான இறுக்கத்தை.

புன்னகையோடு உதிர்க்கும் சொல்
வளர்க்கிறது
தொலைந்துபோன உறவை.

பாறையாய் உறைந்துகிடக்கும்
மௌனத்தை உடைத்தெறிகிறது
உள்ளன்போடு
வந்து விழும் சொல்.

ஊக்கம் நிறைந்த ஒற்றைச்சொல்
எட்ட வைக்கிறது
வெற்றியின் இலக்கை.

பரிவுடன் உதிர்க்கும்
மயிலிறகு வார்த்தைகள்
மருந்தாகின்றன
தீராத மனவலிக்கு.

கர்வமற்ற பேச்சு குறைக்கிறது
இருஉள்ளங்களின் இடைவெளியை.

ஆழமான சொல்லின் துவக்கம்
அளிக்கிறது
அழியாத புதினத்தை
அழகான கவிதையை.

ஆனால்
பிரயோகிக்கும் தொனியிலும்
அடங்கியிருக்கிறது
தேர்ந்தெடுத்து உச்சரிக்கும்
நல்ல சொற்களுக்கான அர்த்தம்.

அன்னமும் நீயும்

9 ஜூலை
சந்தடிமிக்க நகரச்சாலையில் 
விளைவைச்சிந்தியாமலும் 
கவலையுறாமலும்
சட்டென எச்சில் உமிழ்ந்து செல்லும் 
படித்த அறிவிலியாய் 
வீசியிருக்கிறாய்
கற்களும் கனலும் சேர்ந்த 
வார்த்தைகளை யாவரிடமும்.
 
தர்க்கத்தின்  பிறப்பிடமாயும்
சுயநலத்தின் பிம்பமாயும் 
கோபத்தின் சின்னமாயும் 
மற்றவர்களின் மதிப்பீடுகளுக்குட்பட்ட 
நீ இருக்கும் வெளிதனில்
வளர்ந்திருக்கிறது
நம்மிருவருக்குமிடையேயான 
நட்பின் பரப்பு மட்டும் 
கற்பாறையிடை துளிர்த்தெழும் 
செடியென.
 
உலக அதிசயங்களில் 
ஒன்றுபோல் பாவித்து 
விலகாத வியப்புடன் 
புருவமுயர்த்துதலில் வினாத்தொடுத்து 
நமைக்கடந்து போவோர்க்கு 
மௌனப்புன்னகையால்
விவரித்துக்கொண்டேயிருக்கிறேன் 
நீரொதுக்கிப் பாலருந்தும் 
அன்னமாய் நானிருப்பதை.
 
 

ஹைக்கூ

6 மே
1 )     வானமே கூரை -கிராமம்
          கூரையே வானம் -நகரம்
 
2 )     புதிதாய் முளைக்கும் 
         பயிற்சி வகுப்புகள் 
         இரக்கமேயின்றி கொள்ளையடிக்கின்றன 
         குழந்தைகளின் கோடை விடுமுறையை 
 

மகனி(ளி)ன் டைரி

2 மே
பலமுறை யோசித்த பிறகே 
வழங்கி இருப்பீர்கள் 
அனுபவம் தோய்ந்த அறிவுரைகளை .
 
கண்ணாடி பேழையை கையாள்வது போலவே 
கவனமாய் கனிவாய் 
இருந்திருப்பீர்கள் .
 
அவர்களின் சிறகுகளை 
விரிக்க வைக்க 
நீங்கள் உங்களை 
சுருக்கிக் கொண்டிருப்பீர்கள் .
 
இருப்பினும் 
மென்மை கலந்த சொற்கள் அவர்களுக்கு
காயம் தரும் கற்களாய் .
 
உலகமே அவர்கள் என்று 
உரிமையோடு நெருங்குகையில் 
உறுமித்திரியும் விலங்குகளாகவே 
உங்களை உருவகப்படுத்தி இருக்கலாம் .
 
அவமதிப்பெனும் ஆயுதத்தால் தாக்கப்பட்டு 
அலட்சியப் பள்ளத் தாக்கினுள் 
அடிக்கடி நீங்கள் தள்ளப்பட்டிருக்கலாம் .
 
வாய்ப்புக் கிடைக்கையில் – அவர்களின் 
நாட்குறிப்பேட்டை 
வாசிக்கத் தவறாதீர்கள் 
உங்களைப்பற்றிய அவர்களின் மதிப்பீடு 
சராசரிக்கும் கீழாகவோ 
சமயங்களில் பூஜியமாகவோ இருக்கலாம் .
 
ஆனால் 
நம் அன்பின் அடர்த்தியை 
அவர்களும் உணரக்கூடும் 
எதிர்காலத்தில் 
இப்படியொரு நாட்குறிப்பேட்டை 
வாசிக்க நேர்கையில் .

என் தோழி

30 ஏப்
நேற்றுப் போலவே இன்றும் 
இருள் விலகத் துவங்கும் விடியலிலேயே 
வந்து விட்டது குயில். 
கூட்டமாய் எழுப்பிடும் 
கிளிகளின் கீச்சிடலோ 
காக்கைகளின் கரைதலோ 
இரைதேட விரையும் 
பிற பறவைகளின் கத்தலோ 
ஈடாகவில்லை அதன் இன்னோசைக்கு. 
 
தன்னோசை சென்றடையாத 
செவிகள் பற்றி குயிலோ 
குயில் பற்றி செவிகளோ 
பொருட்படுத்தாத தருணத்தில் 
நான் அதன் தோழியானதை 
அது அறியவே இல்லை. 
 
நான் செல்லும் இடமெல்லாம் 
உருவமற்ற ஒலியால்
உலர்ந்த மனதை 
உயிர்ப்பித்துப் போகும் குயில் 
எப்படி தன் தாகம் தீர்த்துக் கொள்ளும் 
நீர் நிலையற்ற இப்பெருநகரில்.
 
இப்போது கூட 
பார்வைக்கு அகப்படாத 
அதனின் தாகம் தீர்க்க 
என் மனம் பயணிக்கிறது 
ஒவ்வொரு மரத்தின் பூக்களையும் 
விலக்கியபடி.

நட்பு

26 ஏப்
அந்த நாளை ஆவலுடன் எதிர்நோக்கி 
வாஞ்சையோடு கைகுலுக்கி 
மிதமாய்க் கட்டியணைத்து 
குடும்பத்தினரை அறிமுகப்படுத்தி 
கவலையற்ற 
கல்விக் கால நினைவுகளை அளவளாவி 
ஆடல் பாடலோடு 
விருந்துண்டு மகிழும் 
ஆண்டுகள் கடந்த 
சந்திப்பின் நிகழ்வினில் 
எந்த ஆணுக்கும் தோன்றுவதில்லை 
மனைவிக்கும் 
தோழமை உண்டென்ற உணர்வுகள் .

முயற்சி

24 ஏப்
முடங்கிக் கிடந்த மனதை
நிமிர வைக்கிறது
அலகினை மட்டுமே மூலதனமாக்கி 
கூடுகட்டப் பொருள் சேகரிக்கும் 
குருவியொன்று .

சிறை

20 ஏப்
சிறிது நேரமே எனினும் 
சூரியனை      
சிறைப்படுத்தி விடுகிறது
சின்னஞ்சிறு பனித்துளி.
 
சிறுபதிவு

வினா …

20 ஏப்
வினா கவிதையின் பின் குறிப்பு (19 .04 .2012 ,தின மலர் செய்தி )
 
மகளைத் தானே வளர்ப்பதற்காக  மனைவியை எரித்துக் கொன்றதனால் புழல் சிறையில் அடைக்கப்பட்ட தந்தைக்கும் 
காப்பகத்தில் உள்ள ஆறு வயது மகளுக்கும் ஆன பாசப் போராட்டத்தின் தாக்கத்தில் எழுதிய கவிதை 

வினா

20 ஏப்

இரக்கம் மிகக்கொண்டு 

மிட்டாய்களும்  பொம்மைகளும் 
வண்ண எழுதுகோல்களும் கொணர்ந்து 
எனைக் காண வருவோரே 
எவர் கொணர்வீர் 
என் தந்தையின் ஸ்பரிசத்தை 
எவர் உணர்வீர் 
எங்கள் பாசத்தை
எவர் புரிவீர் 
என் மனத்தை 
எந்த சிறையில் அடைக்க 
காப்பகத்தில் என்னையும் 
காவலில் என் தந்தையையும் வைத்த 
இரக்கம் அற்ற  கடவுளை !!!
                                                -அடில்லா (மெக்சிகோ)